இதை படிப்பதற்கு முன்பு இங்கு சென்று பார்க்கவும். இதைப் பற்றி கடைசியில் பேசலாம். இந்தத் திரைப்படம் பற்றிதான் இப்போது எங்கும் பேச்சு. பலர் பலவாறு புகழ்கிறார்கள். பலர் பயங்கரமாக விவாதம் செய்கின்றனர். இன்னும் சிலர் கன்னா பின்னா என்று திட்டி தீர்க்கின்றனர். எல்லாம் இணையத்தில் காணக் கிடைக்கின்றது.
நானும் இந்தப் படத்தைத் தேடிச் சென்று பார்த்தேன். ஆழந்த விமர்சனம் எல்லாம் இங்க எழுதப்போறதில்லை. எனக்கும் மும்பை அன்னை நான்கு வருடங்கள் அவள் மடியில் படுத்துறங்க அனுமதித்தாள். அந்த உரிமையில் இதை எழுதுகிறேன். இந்த படம் நடக்கும் களமும் மும்பைதான். மும்பையை எப்படி காட்டி இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் சென்ற எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.
தாராவி – ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய சேரியாகக் கொடி கட்டிப்(??) பறந்தது. இன்றும் இங்கு 10 லட்சத்துக்கும் மேலான மக்கள் வாழ்வதாக புள்ளி விவரம் கூறுகின்றது. Hiranandani பூங்கா மும்பையின் படு பணக்காரர்கள் வாழும் பகுதிகளில் ஒன்று. சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம்(CST, அந்நாளிலும் இந்நாளிலும் VT – விக்டோரியா டெர்மினஸ்னு செல்லமாக அழைக்கப்படுகிறது). காமத்திப்புரா – விலைமாதர்கள் வாழும் (விலை போகும்) இடம். இவ்வளவுதான் இந்தப் படத்தில் காட்டினார்கள். இது தவிர கொஞ்சம் ஆக்ரா, தாஜ் மகால் காட்டினார்கள்.
படத்தில் காட்டிய அத்தனை இடங்களையும் நேரில் பார்த்திருக்கின்றேன். பேருந்து, டாக்சி, புறநகர் இரயில் பயணங்களில் தொட்டு விட்டாவது சென்றிருக்கின்றேன். தாராவி சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று வரை கைக்கெட்டவில்லை. Hiranandani பூங்கா அருகில் உள்ள இன்னொரு குடியிருப்பில் எட்டு, ஒன்பது மாதங்கள் தங்கி இருந்திருக்கின்றேன். CST செல்லாத வார விடுமுறைகள் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் Enlighten சினிமா club-ன் திரைப்படங்களைப் பார்க்க ஒரு மணி நேரம் இரயிலில் பயணம் செய்து CST சென்று அங்கிருந்து தியேட்டர் செல்ல வேண்டும்.
காமத்திபுரா – ஒரு முறையாவது அங்கு சென்று என்னதான் நடக்குதென்று பார்க்க(கவனிக்க: பார்க்க) வேண்டும் என்ற ஆசையில்(இது உண்மை) நானும் நண்பனும் கால் கடுக்க சுற்றினோம். துரதிர்ஷ்டம் எங்களைத் துரத்தி அடித்துவிட்டது. மற்றொரு முறை காலணி சந்தைக்கு நண்பருடன் சென்றபோது டாக்சி வழியாக அதே காமத்திபுராவைத் தாண்டிச் செல்ல நேரிட்டது. வரிசையாக வீடுகள். சில இடங்களில் சந்துகள். எந்த வீட்டிற்கும் கதவு என்ற விஷயமே இல்லை. ஒரு சீலை மட்டுமே கதவாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த பெண்களிடம் அளவுக்கு மீறிய அலங்காரம், நடை, உடை, பாவனைகள் தெரிந்தது. எல்லாவித வியாபாரங்களும் நடந்து கொண்டிருந்தன. அவற்றின் நடுவே எல்லா வயது பெண்களும் விலைபோய் கொண்டிருந்தனர். குழந்தைகள் அங்கும் இங்கும் ஒடிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர். தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் நடந்த இந்தப் பயணம் இன்றளவும் கண் முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றது.
என்னடா இவன் தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் இப்படி கழுத்தை அறுக்கிறானே என்று நினைப்பவர்களுக்காக… விமான நிலைய ரன்வேயில் கிரிக்கெட் விளையாடியதற்காக போலீசாரால் துரத்தப்பட்ட தாராவி சேரிவாழ் சிறுவன், வளர்ந்து ஆளாகி எப்படி “கௌன் பனேகா க்ரோர்பதி” விளையாட்டில் இரண்டு கோடி வெல்கிறான் என்னும் நம்ம ஊர் கதை (தமிழ் நாடு, இந்தியா – எது வேணாலும் எடுத்துக்கலாம்) தேவையில்லாத பாடல்கள், சண்டைக் காட்சிகள் இல்லாமல் எடுத்து ஆஸ்கார் வரை கொண்டு போயிருக்கிறார்கள். நம்ம ஊர் இயக்குனர்கள் இதை நன்றாக கவனிக்க வேண்டிய விஷயம். நம்ம ஊர் கதையாதலால் காதல்தான் பிரதான கருப்பொருள். இது தவிர வழக்கமான அண்ணன் தம்பி பாசம், அண்ணன் செய்யும் துரோகம், போலீஸின் அராஜகம் ஆகியவையும் உண்டு.
இதெல்லாம் தவிர்த்து கடைசியில் கதாநாயகன் கதாநாயகி வாயில் முத்தம் கொடுத்து, நமக்கு வயிற்றெரிச்சல் கொடுத்து படத்தை இனிதே நிறைவு செய்கின்றனர். இந்த குட்டை இங்கே உடைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கின்றேன். சொல்லாம இருக்க முடியலைப்பா… இந்த கடைசி காட்சி மட்டும்தான் Hollywood பாணி. எல்லா நடிகர்களும் அவங்க வேலையை நல்லாவே செய்துள்ளனர். குறிப்பாக நம்ம கதாநாயகன். பதினெட்டு வயதாம் நம்ப முடியவில்லை. உணர்ச்சிகளை உணர்ந்து நடித்துள்ளான்(ர்). மிகச் சின்ன வயது ஹிரோவும் வாய்ப்பே இல்லாமல் கலக்கியிருக்கிறார். அந்தக் கலவரக் காட்சியில் அவன் அம்மாவை யாரோ கட்டையால் அடிக்க, ஒரு நொடி இவன் திரும்பி ஒரு பார்வை பார்ப்பான் பாருங்க… யப்பா. பயம், கோபம், பீதி எல்லாம் கலந்த பார்வை அது. முதல் தரமான நடிப்பு. கொஞ்சம் விபரம் தெரிந்த ஹிரோவாக வருவது வேறு யாரும் இல்லை, “தாரே ஜமின் பர்” திரைபடத்தில் ராஜன் தாமோதரன் என்ற பெயரில் கால் ஊனமுற்ற சிறுவனாக வருவானே அவனேதான். இதிலேயும் நல்லாவே நடித்திருக்கிறார். இது போக கண் குருடாக்கப்பட்ட சிறுமி, போலீசாக வரும் இர்பான் கான், அனில் கபூர் என எல்லாரும் அவங்க திறமையை காட்டி இருக்காங்க.
ஒளிப்பதிவு ரொம்ப சூப்பர்னு இல்லைனாலும் படத்துக்கு நல்லாவே கை கொடுத்திருக்கு. தாராவிச் சேரியையும், அழகான இருப்புப் பாதை வழிகளையும் காட்சி அமைத்த விதம் மிக அருமை. இரண்டு விஷயங்கள் உறுத்தல். படம் முடிந்தபின் வரும் பாடலுடன் கூடிய நடனம். இரண்டாவது அந்த தாதா என்ன ஆனான், என்ன பண்ணானு காட்டாம விட்டது. மற்றபடி பார்கக வேண்டிய படம் ஒரு முறையாவது. தியேட்டரிலோ இல்லை டிவிடி, விசிடியிலோ.
*************************************************************************************************
இந்தப் படத்தைப் பத்தி சொல்லிட்டு A.R.ரகுமான் பத்தி சொல்லலைனா அந்த பாவம் என்னை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சும்மா விடாது. இந்தப் படம் இன்னிக்கு இவ்வளவு தூரம் பேசப்படுதுன்னா அதுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று ரகுமானின் இசை. இரண்டு மாதங்கள் நேரம் கேட்டுட்டு இரண்டு வாரங்களில் முடிச்சி கொடுத்திருக்கிறார் தலைவர். படம் பார்க்கும் முன்பே பின்னணி இசையை கேட்டு விட்டேன். அப்பவே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது இந்த படம். அந்த எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. டைட்டில் இசையாகட்டும், அந்த கலவரத்தின் இசையாகட்டும், கதாநாயகியை இரயில் நிலையத்தில் கதாநாயகன் பார்க்கும் இடமாகட்டும், கதாநாயகிக்கான இசையாகட்டும் – பின்னணி இசையை முன்னணிக்கு கொண்டு வந்துட்டார். மூணு ஆஸ்கார்க்கு பரிந்துரைனா சும்மாவா… “Jai Ho” பாட்டுக்கே “Best Original Song” -க்கான ஆஸ்கார் பரிந்துரைன்னா, ரகுமான் “ரோஜா” காலத்திலேயே ஆஸ்கார் வாங்கியிருக்கணும். என்னவோ இந்த ஆஸ்கார் பத்தி ஒன்னியும் புரிய மாட்டேங்கிது.
எனக்குப் பிடித்தவை “O..Saya”(டைட்டில்), “Riots”(கலவரம்), “Mausam & Escape”(கதாநாயகியை இரயில் நிலையத்தில் கதாநாயகன் பார்க்கும் இடம்), M.I.A-வின் “Paper Planes”(சின்ன வயது கதாநாயகனும், அவன் அண்ணனும் பல இரயில்களில் வாழும் காட்சிகள்), “Liquid Dance”(கொஞ்சம் Rangeela Theme இசையை ஞாபகப்படுத்தும்), “Latika’s Theme” & “Dreams on Fire”. “Jai Ho” பாடல் “குரு” படத்தில் வரும் “குருபாய் குருபாய்” இசையையும், “அழகிய தமிழ்மகன்” படத்தில் வரும் “எல்லாம் எல்லாம் இறைவனுக்கே” பாடலையும் ஞாபகப்படுத்தும். “Latika’s Theme” பாடல் “Rang De Basanti” படத்தில் வரும் “Tu Bin Bataya” பாடலினை நினைவு படுத்துகின்றன.
என்ன இருந்தாலும் ரகுமான் ரகுமான்தான். இசையைக் கேட்கும் போதே முழு படமும் கண்கள் முன் ஓடுவது தவிர்க்கமுடியாத சந்தோஷம்
(Free Show இல்லையா!!!)
அந்த புகைப்படங்களைப் பார்த்தீங்களா… எல்லாம் மும்பை வாசத்தில் இருக்கும் போது எடுத்ததுதான். ஜனவரி 13 2008, ஞாயிற்று கிழமை. Enlighten club திரைப்படம் பார்த்திட்டு திரும்பி வந்திட்டு இருந்த போது CST இரயில்வே நிலையத்தில் ஒரு காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். ஒரு பொண்ணை நாலு பேர் இரயில் பெட்டிகளுக்கு நடுவே விரட்டுறாங்க. ஏதோ மெகா சீரியல் எடுக்கிறாங்க போலன்னு நானும் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தேன். எங்கேயோ store பன்ணிட்டு அப்புறம் மறந்தே போயிட்டேன். போன வியாழக் கிழமை (ஜனவரி 22 2009) “Slumdog Millionaire” முன்னோட்டம் பார்த்தேன். இரண்டு நொடி அந்த இரயில் நிலைய காட்சி வந்தது. எங்கோ இதை பார்த்த ஞாபகம். இராத்திரி 12 மணிக்கு என்னோட 250 GB External Hard Disk Drive, சில பல DVD-கள் தேடி இந்த போட்டோக்களைக் கண்டுபிடிச்சு, கொஞ்சமா process பண்ணி மக்கள் பார்வைக்கு வச்சாச்சி. எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு.
Posted in Uncategorized
ஏன்பா திட்டுறீங்க...